'ஆதிபுருஷ்' படத்தில் பிரபாஸ் உடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சுதீப்பிடம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் 'ஆதிபுருஷ்'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் முடிந்தது. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்து வருகிறார்கள்.
டிசீரிஸ் நிறுவனம் மற்றும் ரெட்ரோபிலீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. இதில் பிரபாஸுக்கு நாயகியாக கீர்த்தி சனோன், முக்கியக் கதாபாத்திரத்தில் சன்னி சிங்கும் நடித்து வருகிறார்கள். தற்போது இன்னொரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு சுதீப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது படக்குழு. இதனை கிச்சா சுதீப், தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்தப் பேட்டியில், " 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் எனது மேலாளரிடம் பேசியுள்ளனர். ஆனால், நான் இன்னும் யாரையும் சந்திக்கவில்லை. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து சுதீப் ஒப்பந்தமாவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
'ஆதிபுருஷ்' திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி 'ஆதிபுருஷ்' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஆனால், கரோனா 2-வது அலை தீவிரத்தால் வெளியீட்டில் மாற்றம் இருப்பது உறுதி எனவும் கூறப்படுகிறது.