மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வன்முறை தொடர்பாகக் தொடர் ட்வீட்டுகள் வெளியிட்டதால் நடிகை கங்கணாவின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது அதிரடி சர்ச்சைக் கருத்துகளைப் பகிர்வது நடிகை கங்கணா ரணாவத்தின் வழக்கம். சில சமயங்களில் கங்கணாவின் சகோதரி ரங்கோலியும் தன் பங்குக்கு சர்ச்சைகளைக் கிளப்புவார். இதனால் இருவரும் சட்டரீதியான நடவடிக்கைகளைச் சந்தித்துள்ளனர்.
அண்மையில் மக்கள்தொகை பிரச்சினை பற்றிப் பேசியிருந்த கங்கணா, மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு சிறை தண்டனை வேண்டும் என்று சர்ச்சை கிளப்பினார். பின் ஆக்ஸிஜன் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் அனைவரும் மீண்டும் இயற்கைக்குக் கைம்மாறு செய்ய வேண்டும் என்று பேசிப் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.
தற்போது மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் வெற்றியைத் தொடர்ந்து அங்கு தீவிரமான வன்முறைச் சம்பவங்கள் நடப்பது குறிப்பது கங்கணா ட்வீட் செய்திருந்தார். அங்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற ரீதியில் தொடர் ட்வீட்டுகளைப் பகிர்ந்தார். அவர் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் ட்விட்டரின் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதால், கங்கணாவின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
தனது கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது ஜனநாயகத்தின் மரணம் என்று பேசி இன்ஸ்டாகிராமில் ஒரு காணொலியை கங்கணா பகிர்ந்துள்ளார்.