நடிகர் விவேக் மறைவுக்கு பாலிவுட் நடிகர் அனுபம் கேர் இரங்கல் செய்தி பகிர்ந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று இது குரித்துப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். திடீர் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக் ஏப்ரல் 17 அன்று காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பத்மஸ்ரீ விருது வென்றவரான விவேக்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது பாலிவுட் நடிகர் அனுபம் கேர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "அன்பார்ந்த விவேக், நீங்கள் அற்புதமான நடிகர் மட்டுமல்ல, திரையில் உங்களைப் பார்க்கும்போது அது மக்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. அங்கே கடவுளுக்கு அவருடன் நல்ல மனிதர்கள் தேவை என்று எனக்குத் தெரியும். ஆனால் எங்களுக்கு நீங்கள் அதை விட அதிகமாகத் தேவைப்பட்டீர்கள். நீங்கள் இல்லாத குறையை பல வருடங்கள் உணர்வோம். ஓம் ஷாந்தி" என்று அனுபம் கேர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த ட்வீட்டுக்குக் கீழ் வட இந்திய ரசிகர்கள் பலர் விவேக்கின் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.