பாலிவுட்

ஃபகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவரான பாலிவுட் நடிகர்: 'ஜோஜி'க்குப் புகழாரம்

செய்திப்பிரிவு

'ஜோஜி' திரைப்படத்துக்கு பிரபல பாலிவுட் நடிகர் கஜராஜ் ராவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஃபகத் பாசில் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஜோஜி’. திலீஷ் போத்தன் இயக்கியுள்ள இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பலரும் ஃபகத் பாசிலின் நடிப்பை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் பாலிவுட்டில் 'பதாய் ஹோ', 'லூட் கேஸ்', 'தல்வார்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் குணச்சித்திர நடிகர் கஜராஜ் ராவ், 'ஜோஜி' படத்தை வெகுவாகப் பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"அன்பார்ந்த திலீஷ் போத்தன் மற்றும் இதர மலையாள இயக்குநர்களுக்கு, (குறிப்பாக ஃபகத் பாசில் மற்றும் நண்பர்களுக்கு). சமீபத்தில் நான் 'ஜோஜி' பார்த்தேன். இதைச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். ஆனால், நான் உங்களிடம் சண்டை போட வேண்டும்.

நீங்கள் தொடர்ந்து அசலான சிந்தனைகளை, மிக நேர்மையாக திரையில் கொண்டுவந்து நிஜமாகவே நல்ல சினிமா எடுப்பது நியாயமாக இல்லை. மற்ற மாநில மொழித் திரைப்படங்களிலிருந்து, குறிப்பாக எங்கள் இந்தி மொழிப் படங்களிலிருந்து நீங்கள் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள வேண்டும். சுமாரான படங்களும் கொஞ்சம் எடுக்க வேண்டும்.

அயர்ச்சியைத் தரும் விளம்பரங்கள் எங்கே? ஜீவனில்லாத ரீமேக்குகள் எங்கே? வார இறுதி வசூலின் மீதான மோகம் எங்கே? நீங்கள் எல்லை மீறுகிறீர்கள். நான் சொன்ன இந்த விஷயங்களை நீங்கள் மனதில் எடுத்துக் கொள்ளாமல் நீங்கள் செய்யும் நல்ல வேலையைத் தொடர்ந்து செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

தொற்று இல்லா உலகில் உங்கள் படங்களுக்கு, முதல் நாள் முதல் காட்சிக்கு, கையில் பாப்கார்னோடு நான் எப்போதும் காத்திருப்பேன். உண்மையுள்ள கஜராஜ் ராவ், வட இந்திய ஃபகத் பாசில் ரசிகர் மன்றத்தின் தலைவர் (என்று நானே சொல்லிக் கொள்கிறேன்)” என்று கஜராஜ் ராவ் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT