நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபர்த்தி, சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சமூக ஊடகத்தில் மீண்டும் இணைந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்தது.
சிறையிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுதலையான ரியா, இதுநாள்வரை தனது சமூக வலைதளப் பக்கங்களில் எதுவும் பதிவிடவில்லை.
இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்த ரியா, "எங்களுக்குப் பெண்கள் தின வாழ்த்துகள். என்றும் ஒன்றாக, எனது வலிமை, எனது நம்பிக்கை, எனது மன உறுதி என் அம்மா தான்" என்று குறிப்பிட்டிருந்தார்.
கடைசியாக ஆகஸ்டு 27, 2020 அன்று இன்ஸ்டாகிராமில் ரியா பதிவிட்டார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் இவருக்கும் தொடர்பிருப்பதாகப் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்ட ஆரம்பித்ததால் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சத்துக்கு ஆளானார் ரியா. இந்நிலையில் இன்று மீண்டும் சமூக ஊடகத்தில் ரியா இணைந்துள்ளார்.