ஷாரூக்கான் தயாரிக்கும் ஒரு படத்தில் ஆலியா பட் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்'. பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்துவருகின்றனர். பாலிவுட் நடிகை ஆலியா பட் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்குப் பிறகு ‘டார்லிங்ஸ்’ என்ற படத்தில் நடிக்க ஆலியா பட் ஒப்பந்தமாகியுள்ளார். ஜஸ்மீத் கே. ரீன் இயக்கும் இப்படத்தை நடிகர் ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தைப் பற்றிய கதையைக் கொண்ட இப்படத்தில் மலையாள நடிகரான ரோஷன் மேத்யூ, விஜய் வர்மா மற்றும் ஷெஃபாலி ஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
விரைவில் மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், குறுகிய காலகட்டத்தில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து இந்த ஆண்டே படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் முதல் வாரத்தில் ‘டார்லிங்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டு கௌரி ஷிண்டே இயக்கத்தில் வெளியான ‘டியர் ஜிந்தகி’ படத்துக்குப் பிறகு ஷாரூக்கான், ஆலியா பட் ஒரே படத்தில் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.