பாலிவுட்

இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத்

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கணா ரணாவத் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவுள்ளார்.

பாலிவுட்டில் நிஜ உலக ஆளுமைகளின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் பயோபிக் எடுக்கப்படுவது வாடிக்கைதான். கங்கணா ரணாவத்தே ஜான்சி ராணியின் பயோபிக்கிலும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கிலும் நடித்துள்ளார்.

அடுத்ததாக இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இது பயோபிக் போன்று இருக்காது என்றும், இந்திரா காந்தியின் ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பற்றிச் சொல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பற்றிப் பேசியிருக்கும் கங்கணா, "படத்தின் வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம். திரைக்கதை எழுதும் பணி முடியும் தறுவாயில் இருக்கிறது. இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் திரைப்படமாக இருக்காது. பிரம்மாண்டமான அந்தக் காலகட்டத்தைச் சொல்லும் இன்றைய இந்தியாவின் சமூக அரசியல் நிலையை எனது தலைமுறையினர் புரிந்துகொள்ள உதவும் ஒரு படமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

மேலும், இந்திரா காந்தியைப் போன்ற தோற்றத்தில் தான் இருக்கும் சில பழைய புகைப்படங்களைக் கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

”இது சாதனைப் பெண்களைப் பற்றிய ஒரு ஃபோட்டோ ஷூட். நடிக்க ஆரம்பித்த புதிதில் நான் கலந்துகொண்டேன். ஒரு நாள் இந்த சாதனைத் தலைவியின் கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்பது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை" என்று கங்கணா பதிவிட்டுள்ளார்.

'இந்திரா காந்தி மிகவும் அழகானவர். அவரது தோற்றத்தால் அல்ல. அரசரின் கட்டளைக்கு முன்னால் தயார் நிலையில் இருக்கும் வாள்களைப் போல இருக்கும் அவரது முகம்' என்கிற குஷ்வந்த் சிங்கின் வார்த்தைகளையும் கங்கணா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

பிரபல நடிகர்களை மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தின் அடிப்படையில்தான் இந்தப் படம் உருவாகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், அது எந்தப் புத்தகம் என்பதைப் பற்றி தயாரிப்பு தரப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

அவசர நிலை காலகட்டத்தையும், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்தும் இந்தப் படம் பேசும் என்று தெரிகிறது. இதற்கு முன் கங்கணா ரணவத்தை வைத்து ’ரிவால்வர் ராணி’ என்கிற படத்தை இயக்கிய சாய் கபீர், இந்தப் படத்தின் இயக்கம், கதை, திரைக்கதை ஆகிய பணிகளைக் கவனிக்கிறார்.

`

SCROLL FOR NEXT