இந்தியில் உருவாகி வரும் 'மாநகரம்' இந்தி ரீமேக்கில், முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
2017-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி வெளியான படம் 'மாநகரம்'. இதன் மூலமாக லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமானார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது இந்தியில் 'மும்பைகர்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது 'மாநகரம்'.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே மற்றும் சச்சின் கடேகர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சந்தீப் கிஷன் கதாபாத்திரத்தில்தான் விஜய் சேதுபதி நடிப்பார் என்று பலரும் கருதினார்கள். ஆனால், முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்காக அந்தக் கதாபாத்திரத்தைக் கொஞ்சம் நீட்டித்து திரைக்கதையை வடிவமைத்துள்ளனர்.
'மாநகரம்' படத்தில் வெள்ளந்தியான காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் முனீஸ்காந்த். அதில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 'மாநகரம்' இந்தி ரீமேக்கின் மூலமே விஜய் சேதுபதி இந்தியில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.