தனது பெயரிடப்பட்ட சாலையோர உணவகத்துக்குச் சென்ற பாலிவுட் நடிகர் சோனு சூட் அங்கு சாப்பிட்டு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல வில்லன் நடிகராக இருப்பவர் சோனு சூட். தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி, சிம்பு நடித்த ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து மக்களின் மனதில் ஹீரோவாக மாறியவர் சோனு சூட். அவரது நல்ல உள்ளத்தைப் பார்த்த தெலங்கானாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் அவருக்கு கோயில் கட்டி சிலையும் வைத்தார்.
இதனிடையே தெலங்கானா மாநிம் ஹைதராபாத்தில் அவரது ரசிகர் அனில் என்பவர், சோனு சூட்டின் பெயரில் சாலையோர ஓட்டல் ஆரம்பித்துள்ளார். இதை இன்டர்நெட்டில் பார்த்த நடிகர் சோனு சூட், அண்மையில் அந்த ஓட்டலுக்கு சென்று அந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். மேலும் ஓட்டலில் நடைபெற்ற சமையலுக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்தும் அங்கு சாப்பிட்டும் மகிழ்ந்தார். சோனு சூட் உணவகத்துக்கு வந்த தகவல் அறிந்து ஏராளமான ரசிகர்கள் அப்பகுதியில் திரண்டனர். இதைத் தொடர்ந்து நடிகர் சோனு சூட் அவர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதுகுறித்து சோனு சூட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறும்போது, “அனில் என்பவரது உணவகத்தை சமூக வலைதளத்தில் பார்த்தேன். என் பெயரில் அவர் ஓட்டல் ஆரம்பித்து நடத்தி வருவதைப் பார்த்து வியப்படைந்தேன். இந்த ஓட்டலில் சாப்பிட விரும்பினேன். அதற்கு இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது. இங்கு பிரைட் ரைஸ் மற்றும் கோபி மஞ்சுரியன் சாப்பிட்டேன்” என்றார்.