ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் சோனு சூட்டுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஆந்திராவில் செயல்பட்டு வரும் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு சோனு சூட்டின் பெயரைச் சூட்டிக் கவுரவித்தது. கோவிட்-19 பெருந்தொற்று பரவிய காலத்தில் நடிகர் சோனு சூட் காட்டிய மனிதாபிமானம் மற்றும் நல உதவிகளைப் பாராட்டி அவரை கவுரவிக்கும் விதமாக துப்ப தண்டா என்கிற கிராமத்தில் அவருக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வருவதாக சோனு சூட் அறிவித்திருந்தார். அந்தப் புத்தகத்துக்கு ‘நான் தேவதூதன் அல்ல’ (ஐ அம் நோ மெஸையா) என்று தலைப்பிடப்பட்டது.
இந்நிலையில் தன்னை பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகம் வெளியாகும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என சோனு சூட கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
என்னைப் பற்றி ஒருநாள் புத்தகம் எழுதப்படும் என்றும், அதில் என்னுடைய அனுபவங்களையும், உலக மக்களை தொடர்பு கொண்ட தருணங்களை பற்றியும் எழுதுவேன் என்றும் நினைத்து கூட பார்க்கவில்லை.
என்னுடைய அனுபவங்களை எழுத வேண்டும் என்று என் அம்மா, ஆசிரியர் அனைவரும் கூறுவார்கள். அவை என்றென்றும் நம்முடனே இருக்கும். வேகமாக ஓடும் காலத்தில், நாம் சில தருணங்களை மறக்கும் நிலை ஏற்படும், அந்த சமயத்தில் அவற்றை எடுத்து பார்க்கும்போது நம்மால் மீண்டும் அந்த காலகட்டத்துக்கு செல்லமுடியும்.
இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.