பாலிவுட்

அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர நினைக்கக் கூடாது: ‘தூம் 3’ இயக்குநர் பகிர்வு

ஏஎன்ஐ

அனைத்துத் தரப்புப் பார்வையாளர்களையும் ஒரு எழுத்தாளர் கவர நினைக்கக் கூடாது என்று ‘தூம் 3’ இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா கூறியுள்ளார்.

2013ஆம் ஆண்டு ஆமிர்கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான படம் ‘தூம் 3’. ‘தூம்’ ஆக்‌ஷன் பட வரிசையின் மூன்றாம் பாகமான இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியிருந்தார். ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூல் சாதனையைச் செய்தது.

இப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இப்படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

ஒரு சிறுவனாகவும், ஒரு ரசிகனாகவும் ஏராளமான கொள்ளைச் சம்பவங்கள் குறித்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அப்படியான ஒரு படத்தில் இயல்பாகவே கட்டமைப்புகளுக்கு எதிரான ஒரு விஷயம் இருக்கும். ‘தூம்’ படவரிசையும் அப்படியானதுதான். படத்தின் கதாபாத்திரங்களை நோக்கினால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இருண்ட பக்கம் இருக்கும். ஏதோ ஒரு வகையில் அவர்கள் சமூகத்துக்கு எதிர் சிந்தனை கொண்டவர்களாக இருப்பர் அல்லது ‘தூம் 3’யைப் போல பழிவாங்கும் எண்ணம் கொண்டிருப்பார்கள்.

ஒரு எழுத்தாளராக ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கான கதையைத்தான் நாம் எழுதவேண்டும். அது அனைத்துப் பார்வையாளர்களையும் கவர்ந்துவிட்டால் அதுதான் மிகப்பெரிய வெற்றி. ஆனால், அனைத்துத் தரப்புப் பார்வையாளர்களையும் ஒரு எழுத்தாளர் கவர நினைக்கக் கூடாது. அது ஒரு எழுத்தாளரின் வேலையல்ல. நாம் நமக்குப் பிடித்தவற்றை மட்டுமே செய்ய முயல வேண்டும். பார்வையாளர்களின் பின்னால் ஓடக் கூடாது. நாம் எதை எழுதினாலும், அது வெற்றியோ, தோல்வியோ, ஆனால் அது ஒரு மகிழ்ச்சிப் பயணமாக இருக்கவேண்டும். புதிதாகவும் வித்தியாசமானதாகவும் அது இருக்கவேண்டும். அப்படி வந்ததுதான் ‘தூம் 3’ ''.

இவ்வாறு இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT