கோவிட்-19 பெருந்தொற்று பரவிய காலத்தில் நடிகர் சோனு சூட் காட்டிய மனிதாபிமானம் மற்றும் நல உதவிகளைப் பாராட்டி அவரை கவுரவிக்கும் விதமாக துப்ப தண்டா என்கிற கிராமத்தில் அவருக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்ப தண்டா என்கிற கிராமத்தில், மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் சோனு சூடுக்காகக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிலையை வடித்த சிற்பி மற்றும் உள்ளூர் மக்கள் முன்னிலையில் இந்தக் கோயில் திறக்கப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்த கிராமத்துப் பெண்கள் நாட்டுப் பாடல்களைப் பாடி, ஆரத்தி காமித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
"இந்த கரோனா நெருக்கடி காலத்தில் சோனு சூட் அவர்கள் மக்களுக்காகக் நிறைய நல உதவிகளை செய்து வருகிறார். தனது நல்ல செயல்கள் மூலம் கடவுளின் இடத்தை அவர் அடைந்து விட்டதால் அவருக்காகக் கோயில் கட்டியிருக்கிறோம். அவர் எங்களுக்குக் கடவுள் தான்" என்று மாவட்ட சபை உறுப்பினர் கிரி கொண்டால் ரெட்டி கூறியுள்ளார்.
இந்தக் கோயிலைக் கட்டிய குழுவில் ஒருவரான ரமேஷ் குமார் பேசுகையில், "இந்தியாவின் 28 மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு சோனு சூட் உதவியுள்ளார். தனது மனிதாபிமானத்துக்காகக் விருதையும் வென்றுள்ளார். அவர் இந்த நெருக்கடி சமயத்தில் செய்த உதவி இந்தியாவால் மட்டுமல்ல, உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு மனிதாபிமான செயல் விருதை வென்றார். எனவே கிராமத்தின் சார்பாக அவருக்காகக் கோயில் கட்ட முடிவு செய்தோம். கடவுளிடம் வேண்டுவதைப் போல அவர் கோயிலிலும் பிரார்த்தனைகள் செய்வோம்" என்றார்.
சோனு சூட் தனது உதவும் மனப்பான்மையால் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளதால் அவருக்கு ஒரு பரிசாக இந்தச் சின்னச் சிலையை வடித்ததாக சிலையை வடித்த சிற்பி மதுசூதன் பால் கூறியுள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி மாட்டிக் கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும் அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார்.
இதோடு பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார்.