தனக்கு ஏராளமான ஹீரோ வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் சோனு சூட்டுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஆந்திராவில் செயல்பட்டு வரும் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், கலை மற்றும் மனிதநேயம் துறைக்கு சோனு சூட்டின் பெயரைச் சூட்டிக் கவுரவித்தது.
இந்நிலையில் தனக்குத் தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாக சோனு சூட் கூறியுள்ளார். ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் பேசிய சோனு சூட் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது:
''இப்போது எனக்கு ஹீரோ வாய்ப்புகள் மட்டுமே வந்துகொண்டிருக்கின்றன. என்னிடம் கையில் 4,5 அருமையான கதைகள் உள்ளன. இது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
‘ஆச்சார்யா’ தெலுங்குப் படத்தின் ஷூட்டிங்கின்போது ஆக்ஷன் காட்சிகளில் என்னை அடிப்பதுபோல நடிக்க சிரஞ்சீவி தயங்கினார். தான் அப்படிச் செய்தால் ரசிகர்கள் என்னைச் சபித்து விடுவார்கள் என்று கூறினார்.
என்னுடைய பெற்றோரின் ஆசிர்வாதம் பலனளித்துள்ளது. அதனால்தான் என்னால் ஆயிரக்கணக்கான மக்களிடம் தொடர்புகொள்ள முடிந்தது''.
இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.