இந்தியாவைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டரும், ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவருமான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதை, திரைப்படமாக உருவாகிறது. 'தனு வெட்ஸ் மனு', 'ராஞ்சனா', 'ஜீரோ' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இந்தப் படத்தை இயக்குகிறார்.
பாலிவுட்டில் எடுக்கப்பட்ட பயோபிக் என்று சொல்லப்படும் பல வாழ்க்கை வரலாற்றுப் படங்கள், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டு வசூலில் அசத்தியுள்ளன. மகேந்திர சிங் தோனி, மில்கா சிங், மேரி கோம், சஞ்சய் தத், குஞ்சன் சக்சேனா, கீதா ஃபோகட் உள்ளிட்ட பலரைப் பற்றிய திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பற்றிய திரைப்படம் உருவாகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் குறித்து பிரபல பாலிவுட் பத்திரிகையாளர் தரண் ஆதர்ஷ் ட்வீட் செய்துள்ளார். "விஸ்வநாதன் ஆனந்தைப் பற்றிய பயோபிக் உருவாகிறது. இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ஆனந்த் எல்.ராய் இயக்கவுள்ளார். சன் டயல் என்டெர்டெயின்மென்ட் மற்றும் ஆனந்த் எல்.ராயின் யெல்லோ ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது" என்று அவர் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் எல்.ராய் தற்போது அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் 'அத்ரங்கி ரே' என்கிற திரைப்படத்தைத் தயாரித்து, இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாகிறது. இந்தப் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு பயோபிக் வேலைகள் தொடங்கும் எனத் தெரிகிறது.
சாய்னா நேவால், அபினவ் பிந்த்ரா, பி.வி.சிந்து ஆகியோரைப் பற்றிய திரைப்படங்களும் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.