பாலிவுட்

ரகுல் ப்ரீத் சிங்கிடம் மன்னிப்பு கேட்டு ஒளிபரப்ப வேண்டும்: செய்தி சேனல்களுக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் மன்னிப்பு கோரி, அதை ஒளிபரப்ப வேண்டும் என தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு தேசிய செய்தி ஒளிபரப்புத் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 14ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடந்தது. மேலும் இந்த மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் சுஷாந்தின் காதலி ரியாவை விசாரித்தனர்.

இந்த விசாரணையில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரை ரியா கூறியதாகச் சில தேசிய ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை ஒளிபரப்பின. இதை எதிர்த்து ரகுல் ப்ரீத் சிங் செப்டம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சுஷாந்த் மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட அவரது காதலி ரியா தனது பெயரை எந்த விசாரணையிலும் தெரிவிக்கவில்லை என்றும், தவறான முறையில் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன என்றும் ரகுல் ப்ரீத் சிங் கூறியிருந்தார். தான் ரகுலின் பெயரைக் குறிப்பிடவில்லை என்று ரியாவும் தெரிவித்தார்.

தற்போது இந்த விவகாரத்தில் மூன்று செய்தி சேனல்கள், ரகுல் ப்ரீத் சிங்கிடம் மன்னிப்பு கோரி அதை ஒளிபரப்ப வேண்டும் என்று செய்தி ஒளிபரப்புத் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜீ நியூஸ், ஜீ 24, ஜீ ஹிந்துஸ்தானி ஆகிய சேனல்கள் ரகுலிடம் மன்னிப்பு கோருவதை ஒளிபரப்ப வேண்டும். டைம்ஸ் நவ், இந்தியா டிவி, இந்தியா டுடே, நியூஸ் நேஷன், ஆஜ் தக் மற்றும் ஏபிபி நியூஸ் ஆகிய சேனல்கள், ரகுல் பற்றி பார்வையாளர்களுக்குத் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் மற்றும் பதிவுகளைத் தங்கள் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களிலிருந்து நீக்கவேண்டும் என்று செய்தி ஒளிபரப்புத் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சொல்லப்பட்ட செய்திக்கும், காட்டப்பட்ட புகைப்படங்கள், வரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இந்த ஒளிபரப்பு நடந்துள்ளது என ஆணையம் மேற்குறிப்பிட்ட ஊடகங்களைக் கடுமையாகச் சாடியுள்ளது. மேலும், இதற்காக அந்த ஊடகங்கள் கொடுத்த விளக்கங்களும், தர்க்கங்களும் போதுமானதாக இல்லை என்றும் இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT