தனது நடிப்பில் முடிவாகி, தலைப்பு வைக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு திரைப்படத்திலிருந்து புகைப்படம் ஒன்றை நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இன்றைய தலைமுறை பிரபலங்கள் தொடர்ந்து பதிவிட ஆரம்பிக்கும் முன்னரே சமூக வலைதளங்களின் மூலம் தனது எண்ணங்களைப் பகிர ஆரம்பித்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் மிக எளிமையாக இவர் பகிரும் பல பதிவுகள் ரசிகர்களை ஈர்க்கும். அவ்வபோது சர்ச்சைகளை ஈர்க்கவும் தவறியதில்லை.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய திரைப்பட புகைப்படம் ஒன்றை அமிதாப் பச்சன் பகிர்ந்துள்ளார். அந்த படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் முடிந்து பெயர் கூட வைக்கப்பட்டதாகவும், ஆனால் படம் கைவிடப்பட்டது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் டெனிம் ஜாக்கெட், கருப்பு பேண்ட், கையில் துப்பாக்கி என, 90களின் ஆரம்பத்தில் அமிதாப் நடித்த படங்களின் பாணியில் தோற்றமளிக்கிறார்.
"கைவிடப்பட்ட திரைப்படம். தோற்றம் முடிவாகி, புகைப்படம் எடுக்கப்பட்டு, படத்துக்குப் பெயரும் வைக்கப்பட்டது. ஆனால் படத்தை எடுக்கவேயில்லை. வருத்தம்" என்று அமிதாப் பச்சன் இந்த புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார். படத்தின் பெயர் என்ன, அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
எப்போதும் போல இந்த வருடமும் அமிதாப் பச்சன் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்த்ரா, ஜுண்ட், செஹ்ரே ஆகிய படங்களோடு சேர்த்து பிரபாஸ், தீபிகா படுகோன் இருவரும் நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.