மகாராஷ்டிர அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் பாலிவுட் மாஃபியா கும்பல் அன்பானவர்களாகத் தெரிகிறார்கள் என்று நடிகை கங்கணா கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மும்பை போலீஸாரின் விசாரணை குறித்து நடிகை கங்கணா ரணாவத் குற்றம் சாட்டினார். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
இதனிடையே, மும்பையில் உள்ள அவரது பங்களாவில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் நடந்ததாகக் கூறி மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பங்களாவின் ஒரு பகுதியை இடித்தனர். இது தொடர்பான வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்தச் சூழலில் மதரீதியான வெறுப்பைத் தூண்டுவதாக நடிகை கங்கணா, அவரது சகோதரி ரங்கோலி மீது மும்பை காவல்துறையில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கங்கணா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது மும்பை போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் பாலிவுட் மாஃபியா கும்பல் அன்பானவர்களாகத் தெரிகிறார்கள் என்று கங்கணா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிர அரசாங்கத்தால் நான் எதிர்கொண்ட வழக்குகள், துன்புறுத்தல்கள், வசைகள், அவமானங்கள் ஆகியவற்றால் பாலிவுட் மாஃபியா கும்பல் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன், ஆதித்யா பன்சோலி போன்றோர் மிகவும் அன்பானவர்களாகத் தெரிகிறார்கள். சிலரைக் கவலைகொள்ளச் செய்யும் அளவுக்கு அப்படி நான் என்ன செய்துவிட்டேன் என்று வியக்கிறேன்''.
இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.
சுஷாந்த் மரணத்துக்கு பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்களே காரணம் என்று நடிகை கங்கணா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.