பிரசவத்துக்குப் பிறகு விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அனுஷ்கா சர்மா கூறியுள்ளதாவது:
''படப்பிடிப்புத் தளத்தில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாகப் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். என்னுடைய குழந்தை பிறந்ததும் வேலை, குடும்பம், குழந்தை ஆகியவற்றுக்கான முறையான நேர ஒதுக்கீடு செய்த பின்பு படப்பிடிப்புகளில் பங்கேற்க உள்ளேன். என் வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து பணிபுரிய உத்தேசித்திருக்கிறேன். ஏனெனில், நடிப்புதான் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
படக்குழுவினரைச் சந்திப்பது, படப்பிடிப்புத் தளங்களின் வேடிக்கைகளில் மூழ்குவது ஆகியவை மிகவும் உற்சாகம் தரும் விஷயங்களாகும். திரைத்துறைக்கு இந்த வருடம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், அதே பழைய உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருவதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தற்போது விளம்பரப் படங்களின் படப்பிடிப்புக்குச் செல்லும் அதே வேளையில் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்கிறேன். எனக்குத் தேவையான அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.