பாலிவுட்

ஓடிடி திரைப்படங்களையும் விருது நிகழ்ச்சிகளில் இணைக்க வேண்டும் - பூமி பெட்னேகர் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஓடிடியில் வெளியாகும் படங்களையும் விருது நிகழ்ச்சிகளில் இணைக்க வேண்டும் என்று நடிகை பூமி பெட்னேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்‌ஷய் குமாரின் கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துர்காமதி: தி மித்’. நாயகியை மையமாகக் கொண்ட இப்படத்தில் பூமி பெட்னேகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.அஷோக் இயக்கியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி அன்று ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.

இப்படம் குறித்து பூமி பெட்னேகர் கூறியுள்ளதாவது:

‘துர்காமதி’ திரைப்படத்தை நாங்கள் உருவாக்கத் தொடங்கிய போது இப்படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்று தான் விரும்பினோம். ஆனால் கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தை தற்போது டிஜிட்டலில் வெளியிடுவது அவசியமாகிறது. என் இதயத்துக்கு நெருக்கமான இரண்டு படங்கள் டிஜிட்டலில் வெளியாகிறது. இப்படங்கள் உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களை சென்றடைகின்றன என்பதை நான் உணர்ந்து கொண்டேன். ‘டோலி கிட்டி ஆர் வோ சமக்தே சித்தாரே’ திரைப்படம் பார்வையாளர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. அதே போன்ற அன்பு ‘துர்காமதி’ படத்துக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இது போன்ற சூழலில் விருது நிகழ்ச்சிகளில் ஓடிடியில் வெளியாகும் படங்களையும் சேர்க்க வேண்டும். அப்படங்களில் கடின உழைப்பை கொடுத்து நடிகர்களை அங்கீகரிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். மேற்கத்திய நாடுகளில் நடக்கும் விருது நிகழ்ச்சிகளில் ஓடிடி திரைப்படங்களை அங்கீகரிக்க தொடங்கி விட்டனர். அதே போன்ற நிலை இந்தியாவிலும் உருவாக வேண்டும்.

இவ்வாறு பூமி பெட்னேகர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT