பாலிவுட்

மோசமான படங்களில் நடித்ததில் வருத்தமில்லை: நசீருதின் ஷா

ஐஏஎன்எஸ்

மோசமான படங்களில் நடித்ததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று நடிகர் நசீருதின் ஷா கூறியுள்ளார்.

இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் நசீருதின் ஷா. 'ஸ்பர்ஷ்', 'ஜுனூன்', 'பார்' உள்ளிட்ட படங்களில் ஆரம்பித்து, 'எ வெட்ன்ஸ்டே', 'ஜல்வா', 'இஷ்க்கியா' என இந்தத் தலைமுறை ரசிகர்கள் வரை ஈர்த்துள்ளார். 'பாந்திஷ் பாண்டிட்ஸ்' என்கிற சீரிஸ் மூலம் ஓடிடி தளங்களிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

தனது திரை வாழ்க்கையைப் பற்றிப் பேசியிருக்கும் ஷா, "என் வாழ்க்கையில் ஒரு சின்ன வருத்தம் கூட இல்லை. நான் தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால், அவற்றைக் கடந்து வந்துவிட்டேன். அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறியிருக்கிறேன்.

என் வாழ்க்கையில் வருத்தம் என்று ஏதாவது வைத்திருந்தால் நான் ஒரு முட்டாள். மிக மோசமான சில படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் நடிக்கும்போது எனக்கு திருப்தி இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், நடித்ததில் வருத்தமில்லை. எனது ஒவ்வொரு முடிவுமே எனக்கு ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

அற்புதமான, திருப்திகரமான பயணமாகவே இது இருந்திருக்கிறது. நான் நினைத்ததை விடச் சிறப்பாக இருந்திருக்கிறது. எனது கனவுகளை நனவாக்க முடிந்தது எனக்குக் கிடைத்த ஆசிர்வாதமே. இனி புதிதாகக் கனவுகளைத் தேட வேண்டும் என நினைக்கிறேன். இன்னும் புதிய விஷயங்களைத் தேடி வருகிறேன். வாழ்க்கையிடமிருந்து நாம் எந்தச் சலுகைகளையும் எதிர்பார்க்கக் கூடாது. நாமேதான் சவால்களைத் தேட வேண்டும்.

ஆரம்பத்தில் நான் துறையில் பொருந்திப்போவேனா என்பது குறித்து எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால், அதற்கு அவசியம் இல்லை. சமாளித்து, பணம் சம்பாதித்தால் போதும் என்று உணர்ந்தேன்.

நான் தேர்ந்தெடுத்திருக்கும் துறையில் கற்பதற்கான பெரிய உலகமே இருக்கிறது. எனது கலையைப் பட்டை தீட்ட வேண்டும் என்கிற ஆர்வம்தான் என்னைச் செலுத்துகிறது. நிறைய இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகுதான் கற்பித்தலைப் பற்றி அறிந்துகொண்டேன். அது எனக்கு ஊக்கத்தைத் தருகிறது.

இளம் நடிகர்களுக்கு உதவுவது, அவர்களுடன் பணியாற்றுவது, அவர்கள் திறனை வளர்க்க உதவுவது என அதில் அதிக சந்தோஷம் இருக்கிறது. நான் வாழும் வரை இதைத் தொடர முடியும் என்று நம்புகிறேன்" என்று நசீருதின் ஷா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT