சுயசரிதை எழுதும் யோசனையை கைவிடவிருப்பதாக நடிகர் சைஃப் அலி கான் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் நடிகை ஷர்மிளா தாகூர் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சைஃப் அலி கான். 1993ஆம் ஆண்டு யாஷ் சோப்ராவின் 'பரம்பரா' திரைப்படத்தில் அறிமுகமான சைஃப் அலி கான் இன்றுவரை பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் பாலிவுட்டின் வாரிசு அரசியல் பற்றிய சர்ச்சை வெடித்த போது தானும் கூட அதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக சைஃப் அலி கான் கூற, செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த நீங்களே எப்படி பாதிக்கப்பட்டிருப்பீர்கள் எனப் பலரும் சைஃப் அலி கானை கிண்டல் செய்ய, அவதூறு பேச ஆரம்பித்தனர்.
இந்த அனுபவத்தால், தனது சுயசரிதை யோசனையையும் கைவிடலாம் என்று சைஃப் ஆலோசனை செய்து வருகிறார்.
"என்னை எழுதச் சொன்னார்கள். முதலில் எழுதலாம் என நினைத்தேன். ஆனால் இப்போது விலகிவிடலாம் என்றிருக்கிறேன். ஏனென்றால் அதற்காக நிறைய மெனக்கிட வேண்டும். மேலும் மிகவும் உண்மையாக அதை எழுத வேண்டும். அது கண்டிப்பாக ஒரு சிலரைப் பாதிக்கும். எழுதிய பிறகு என்னை நோக்கி வரும் 100 சதவித அவதூறுகளை என்னால் கையாள முடியுமா என்று எனக்கு உண்மையில் தெரியவில்லை.
இதைச் சொல்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள், ஆனால் சொல்லத்தான் போகிறேன். இந்தியாவில் ரசிகர்களில் ஒரு தரப்பு மிகவும் எதிர்மறையாக இருக்கின்றனர். அவர்களுடன் எனது வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. இன்னும் பதிப்பகத்தினரிடம் கூட நான் இது பற்றி பேசவில்லை" என்று சைஃப் அலி கான் கூறியுள்ளார்.
சைஃப் அலிகான் நடிகை கரீனா கபூரைத் திருமணம் செய்து கொண்டார். சைஃப்புக்கு முதல் திருமணத்தில் பிறந்த சாரா அலி கான் என்ற மகளும் உண்டு. இவர் பாலிவுட்டில் நாயகியாக இருக்கிறார்.