'வார்' திரைப்படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இரண்டு வருடங்கள் கழித்து ஷாரூக்கான் நடிக்கும் படம் இது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு இது அவருக்கு பாலிவுட்டில் மறுவாழ்வு தரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்காக நீளமாக தலைமுடி வளர்த்திருக்கும் ஷாரூக், யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் புதன்கிழமை அன்று காணப்பட்டதால், இந்தப் படப்பிடிப்பு தொடங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடைசியாக ஷாரூக் நடிப்பில் 2018ஆம் ஆண்டு 'ஜீரோ' திரைப்படம் வெளியாகி தோல்வி கண்டது. தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இதில் சல்மான்கான் கவுரவத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். 'ஏக் தா டைகர்' திரைப்படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்திலேயே சல்மான்கான் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. மேலும் ஷாரூக்கானும் கூட தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு நகைச்சுவைப் படம், 'பாரத்' திரைப்பட இயக்குநர் அலி அப்பாஸ் ஸாஃபருடன் ஒரு படம், 'தி ஃபேமிலி மேன்' இயக்குநர்களான ராஜ் - டிகே இணையின் படம், கோலிவுட்டைச் சேர்ந்த அட்லீயுடன் ஒரு ஜனரஞ்சகமான படம் என அடுத்தடுத்த படங்களுக்கான பேச்சுவார்த்தையில் ஷாரூக்கான் ஈடுபட்டுள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.