பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள 'ஆதிபுருஷ்' 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ளது.
'சாஹோ' படத்தைத் தொடர்ந்து 'ராதே ஷ்யாம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்தை முடித்துவிட்டு, நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம், 'ஆதிபுருஷ்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் பிரபாஸ்.
'தன்ஹாஜி' இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் 'ஆதிபுருஷ்'. பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.
இன்று (நவம்பர் 19) 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் தங்களுடைய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலி கானும் நடிக்கவுள்ளனர். இதில் நாயகியாக நடிக்க முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் இப்போதே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றாலும், வெளியீட்டுத் தேதியை இப்போதே முடிவு செய்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.