பாலிவுட்

உருவாகிறது 'மிர்ஸாபூர்' சீஸன் 3: அமேசான் ப்ரைம் முடிவு

செய்திப்பிரிவு

பிரபல க்ரைம் இணையத் தொடரான மிர்ஸாபூரின் 3-வது சீஸன் தயாரிக்கப்படும் என அமேசான் ப்ரைம் வீடியோ தளம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் வெளியான மிர்ஸாபூரின் 2-வது சீஸன், வெளியான ஏழே நாட்களில், இந்தியாவிலேயே அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட இணையத் தொடர் என்ற சாதனையைப் படைத்தது. ஏற்கெனவே இந்தியாவில் அதிகப் பயனர்கள் முழுதாகப் பார்க்கப்பட்ட தொடர் என்கிற பெருமையை மிர்ஸாபூர் பெற்றிருந்தது. இதில் கிட்டத்தட்டப் பாதி ரசிகர்கள் முதல் சீஸனை முடித்த கையுடன் இரண்டாவது சீஸனை விடாமல் பார்த்திருக்கின்றனர். அதுவும் வெளியான 48 மணி நேரத்துக்குள். இது ஒரு புது சாதனை என அமேசான் தரப்பு கூறியுள்ளது.

எக்ஸல் மீடியா அண்ட் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருந்த இரண்டாவது சீஸனை வெளியான ஒரு வாரத்தில் 180 நாடுகளிலிருந்து பலதரப்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர். அக்டோபர் 23ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த சீஸன், அதிக எதிர்பார்ப்பின் காரணமாக ஒரு நாள் முன்னதாகவே வெளியானது.

"கடந்த இரண்டு வருடங்களாகப் பார்வையாளர்கள் மிர்ஸாபூர் உலகத்திலும், அதன் கதாபாத்திரங்களுடனும் ஆழ்ந்து பயணித்துள்ளனர். இந்த சீஸனுக்கு அவர்கள் காட்டியிருக்கும் அன்பு முன்னெப்போதும் இல்லாத ஒன்று" என்று அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவின் தயாரிப்புப் பிரிவு தலைவர் அபர்ணா புரோஹித் கூறியுள்ளார்.

முன்னா மற்றும் குட்டு என்கிற இரண்டு பிரதான பாத்திரங்களின் மோதலே இந்தக் கதை. மிர்ஸாபூரை ஆள வேண்டும் என்று இவர்கள் அதிகாரம், அரசியல், பழிவாங்குதல் எனச் செய்யும் விஷயங்களும், அரசியல்வாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் இருக்கும் கூட்டும் தீவிரமடைகிறது.

SCROLL FOR NEXT