பாலிவுட்

போதைப்பொருள் விவகாரம்: பிரபல பாலிவுட் தயாரிப்பாளரின் மனைவி கைது

செய்திப்பிரிவு

பாலிவுட் தயாரிப்பாளர் ஃபிரோஸ் நாடியாட்வாலாவின் மனைவியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின்போது, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்தி, சுஷாந்துக்குத் தெரியாமலேயே போதைப்பொருள் கொடுத்து, அவரது மனநிலையைப் பாதிக்கச் செய்ய முயன்றதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் வாட்ஸ் அப்பில் போதைப் பொருட்கள் குறித்து உரையாடியதாக செல்போன் ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோரிடம் என்சிபி அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

சில நாட்களாக ஓய்ந்திருந்த இந்த போதைப்பொருள் விவகாரம் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

நேற்று (08.11.20) பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான ஃபிரோஸ் நாடியாட்வாலாவின் வீட்டில் என்சிபி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஃபிரோஸின் மனைவி சபானா சயீதிடம் 10 கிராம் கஞ்சா சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து என்சிபி அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஃபிரோஸுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியதாகவும், ஆனால் குறிப்பிட்ட தேதியில் அவர் ஆஜராகாமல் இருந்ததாலேயே அவர் வீட்டில் சோதனை நடத்தியதாகவும் என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT