ஷாரூக்கான், கஜோல் நடிப்பில் உருவான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படம் மீண்டும் திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.
ஊரடங்குக்குப் பின் 8 மாதங்கள் கழித்து திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில், மும்பையின் மராத்தா மந்திரி திரையரங்கில் மீண்டும் இந்தப் படம் திரையிடப்படுகிறது.
முன்னதாக, இதே திரையரங்கில் 1000 வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்த 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே', 2015 ஆம் ஆண்டு தனது ஓட்டத்தை நிறைவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தைத் தொடர்ந்து திரையிட நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது மீண்டும் இந்தப் படம் திரையிடப்படுகிறது.
"மும்பையில் திரையரங்குகளைத் திறக்க அனுமதி தரப்பட்டிருப்பதால், இந்திய சினிமா வரலாற்றில் மிக நீண்ட காலம் ஓடிய 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' படத்தை மீண்டும் மும்பையின் மராத்தா மந்திரி அரங்கின் வெள்ளித்திரைக்குக் கொண்டு வருவதில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மகிழ்ச்சியடைகிறது" என யாஷ் ராஜ் நிறுவனத்தின் விநியோகப் பிரிவு துணைத்தலைவர் ரோஹன் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
இந்தப் படம் தற்போது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் இந்தப் படத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு பலருக்குக் கிடைக்கும் என்றும், அவர்களை இந்தப் படம் ராஜ் மற்றும் சிம்ரன் ஆகியோரின் உலகுக்கு அழைத்துச் செல்லும் என்றும் ரோஹன் கூறியுள்ளார்.
அன்று ரூ.4 கோடியில் தயாரிக்கப்பட்டிருந்த இந்தப் படம் ரூ.102.5 கோடியை வசூலித்தது. ஏற்கெனவே 25-வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி, சவுதி அரேபியா, கத்தார், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஃபிஜி, நார்வே, ஸ்வீடன், ஸ்பெயின், பின்லாந்து, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.