சர்ச்சைக்குரிய புகைப்படங்களை எடுத்ததற்காக நடிகை பூனம் பாண்டேவைக் கோவா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கேனாகோனா மாவட்டத்தில் இருக்கும் சபோலி அணையில் பூனம் பாண்டே எடுத்த ஆபாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின. இதனால் அந்தப் பகுதியில் எதிர்ப்புகள் எழ ஆரம்பித்தன. இதை அனுமதித்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் போராடின.
கடமை தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கேனாகோனா பகுதியை ஒரு நாள் முழுவதும் முடக்கி வைப்போம் என்று போராட்டம் செய்தவர்கள் அச்சுறுத்தினர். சர்ச்சைக்குரிய புகைப்படம் எடுக்க அனுமதி அளித்த காவல்துறை ஆய்வாளர் துகாராம் சாவன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்ட பிறகே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
சர்ச்சைக்குரிய புகைப்படங்களைத் தொடர்ந்து பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொண்டதாக பூனம் பாண்டே மீது பல்வேறு புகார்கள் காவல்துறையினருக்கு வந்தன.
இந்நிலையில், வடக்கு கோவாவில் ஒரு கடற்கரை ரிசார்ட்டில் தங்கியிருந்த பூனம் பாண்டேவைக் காலாங்குட் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவரைத் தெற்கு கோவாவில் கேனாகோனா காவல்துறையிடம் ஒப்படைக்கவுள்ளனர். பூனம் பாண்டே மீது ஐபிசி 294 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.