நடிகர் ஷாகித் கபூர் நடிக்கவிருக்கும் வெப் சீரிஸில் அவருக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தெலுங்கில் வெளியான 'ஜெர்ஸி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடித்து வருகிறார். நவம்பர் 9 ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு சண்டிகரில் தொடங்க உள்ளது. இந்த வேலைகள் முடிந்த பிறகு வெப் சீரிஸில் ஷாகித் கபூர் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.
அமேசான் ப்ரைம் தளத்துடன் ஷாகித் கபூர் ரூ.60 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே இந்த வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார். 'ஃபேமலி மேன்' வெப் சீரிஸின் மூலம் பாராட்டுப் பெற்ற இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் ஷாகித் கபூரின் வெப் சீரிஸை இயக்குகின்றனர். இந்த வெப் சீரிஸ் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிறது.
தற்போது இதில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா, விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏற்கெனவே 'மஸபா மஸபா' வெப் சீரிஸில் கவுரவத் தோற்றத்தில் தோன்றியிருக்கிறார்.
அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. .