'மோடி: சிஎம் டு பிஎம்' என்கிற வெப் சீரிஸின் இரண்டாவது சீஸனில் பிரதமர் நரேந்திர மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் மகேஷ் தாகூர் நடிக்கிறார்.
உமேஷ் சுக்லா இயக்கும் இந்த வெப் சீரிஸ், மோடியின் பதின்ம வயதிலிருந்து ஆரம்பித்து அவர் குஜராத் மாநிலத்துக்கு மூன்று முறை முதல்வரானது, பின் பிரதமரானது வரை அவரது வாழ்க்கைக் கதையைச் சொல்கிறது. இதில் முதல் சீஸனில் இளம் நரேந்திர மோடியாக நடிகராக ஆசிஷ் சர்மா நடித்திருந்தார்.
தற்போது இரண்டாவது சீஸனில் அவரது நடுத்தர வயது தோற்றத்தில் மகேஷ் தாகூர் நடிக்கிறார்.
"நம் சிறு வயதிலிருந்தே நமது பிரதமர் நரேந்திர மோடியின் அற்புதமான பயணத்தைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். நமது தேசத்தில் பெருமைக்குரிய இடத்தில் இடம்பெறும் கதை இது. அப்படி ஒரு பெருமைக்குரிய கதாபாத்திரத்தில் நடிப்பது உண்மையில் ஒரு கவுரவம்.
ஆனால், இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதில் பெரிய பொறுப்புகளும் உள்ளன. பார்வையாளர்கள் இதை எப்படி ரசிப்பார்கள் என்பதை அறிய நான் ஆர்வமாக இருக்கிறேன். ஒட்டுமொத்தத் தொடரும் அவர்களுக்குப் பிடிக்கும் என்று நான் நம்பிக்கையாய் இருக்கிறேன்" என்று மகேஷ் தாகூர் கூறியுள்ளார்.
ஈராஸ் நவ் தளத்தில் நவம்பர் 12 முதல் இந்தத் தொடர் காணக் கிடைக்கும்.