ஷாரூக்கான் - கஜோல் நடிப்பில் வெளியான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆனதைக் கொண்டாட, தயாரிப்பாளர்கள் சில வெளிநாடுகளில் இப்படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளனர்.
‘டிடிஎல்ஜே’ (DDLJ) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திரைப்படம் ஜெர்மனி, சவுதி அரேபியா, கத்தார், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஃபிஜி, நார்வே, ஸ்வீடன், ஸ்பெயின், பின்லாந்து, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியாகியுள்ளது.
தயாரிப்பு நிறுவனத்தின் சர்வதேச திரைப்பட விநியோகப் பிரிவின் துணைத் தலைவர் நெல்சன் டி சோஸா இதுபற்றிப் பேசுகையில், "இந்த க்ளாசிக் திரைப்படத்தை மக்கள் கொண்டாடும் வகையில் படத்தின் 25-வது வருடத்தை முன்னிட்டு மறு வெளியீடு செய்துள்ளோம். படத்தை மீண்டும் ஒரு முறை திரையில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கும். இந்தியர்கள் வாழும் சர்வதேச நாடுகளிலும், இந்தியர்கள் இல்லாத நாடுகளிலும் கூட படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
1995 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'. ஷாரூக்கான், கஜோல் நடித்திருந்த இந்தத் திரைப்படத்தை யாஷ் சோப்ரா தயாரித்திருந்தார். ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமான இப்படம் இரண்டு என்.ஆர்.ஐ.களிடையே இந்தியாவில் மலரும் காதலைப் பற்றிய கதை .
இதன் பிறகு பல பாலிவுட் படங்களில் என்.ஆர்.ஐ.கள் காதல் கதை சொல்லப்பட்டது. படத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே படம் சம்பந்தப்பட்ட பலர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.