பாலிவுட்

இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வந்ததால் கிராமத்துப் பெண் என்று நினைத்தனர்: கங்கணா ரணாவத்

ஐஏஎன்எஸ்

தனது ஆரம்ப நாட்களில், தான் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வந்த நபர் என்பது தெரிந்து அதை வைத்துத் தன்னைப் பற்றித் தீர்மானித்தார்கள் என நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்துப் பகிர்ந்த கங்கணா, "இமாச்சலப் பிரதேசம் படப்பிடிப்புக்கு ஏற்ற புதிய இடமாக மாறிவிட்டது. ஆனால், ஆரம்பத்தில் நான் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவள் என்று சொன்னபோது அதைப் பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் ஏதோ குக்கிராமத்திலிருந்து வந்ததாக முடிவு செய்தார்கள். வணிக ரீதியாக இப்போது இது நல்ல முன்னேற்றம். அதை சுற்றுச்சூழல் ரீதியாக சாதகமாக்கும் நிலையை நாம் உருவாக்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் கங்கணா ட்வீட் செய்துள்ளார். ஒரு பயனர், ஸ்பிடி பள்ளத்தாக்கின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து அதில் இருந்த குப்பைகளைச் சுட்டிக் காட்டி, இந்த 'அழகான பள்ளத்தாக்கை நாசப்படுத்துவது நகரத்திலிருந்து வந்த ஒழுக்கமில்லாதவர்களின் செயல்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கவனித்த கங்கணா, "இமாச்சலப் பிரதேசத்துக்கு வாருங்கள். ஆனால் பிளாஸ்டிக் பொருட்களைக் குப்பையாக்கி வீசாதீர்கள். குறிப்பாக ஒரு முறை மட்டுமே பயனாகும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள், சிப்ஸ் பாக்கெட்டுகள் ஆகியவற்றை வீசாதீர்கள்.

ஒரு சில உணர்ச்சியற்ற, ஒழுக்கமற்ற நகரத்து முட்டாள்களால் ஒரு சில நாட்களில் இந்த அழகான பள்ளத்தாக்கு மிகப்பெரிய குப்பைமேடாக மாறிவிடும் அபாயம் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT