பாலிவுட்

கங்கணா ரணவத் மற்றும் சகோதரிக்கு சம்மன் அனுப்பிய மும்பை காவல்துறை

ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்துக்கும் அவரது சகோதரி ரங்கோலி சாண்டெலுக்கும் மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தேசத்துரோக குற்றச்சாட்டு உள்ளிட்ட சில பிரிவுகளில் இவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

"ஐபிசியில் 124ஏ பிரிவு (தேசத்துரோகம்) மற்றும் வகுப்புவாத வெறுப்பினை உருவாக்குவது, பொய்யான தகவல்களளைப் பரப்புவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. புகாரளித்த முனவராலி சாஹில் ஏ சயீது என்பவரின் வாக்குமூலமும் காவல்துறையால் பெறப்பட்டுள்ளது" என்று முனவராலியின் வழக்கறிஞர் ரவீஷ் ஸமீந்தார் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 17 அன்று இந்தப்புகாரை விசாரித்த பாந்த்ரா பெருநகர நீதிபதி, சகோதரிகள் இருவருக்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டார். அக்டோபர் 26-27 தேதிகளில் சகோதரிகள் இருவரும் பாந்த்ரா காவல் நிலையத்துக்கு வர வேண்டும்.

பாலிவுட்டில் நடிகர் தேர்வு இயக்குநராகவும், உடற் பயிற்சி நிபுணராகவும் இருக்கும் சயீது, கங்கணா மற்றும் ரங்கோலி இருவரும், துறைக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும், வாரிசு அரசியல், போதை மருந்து பழக்கம், மத சார்பு ஆகியவற்றின் அடிப்படையில் துறையினரை தவறாக சித்தரிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு பிரிவைச் சேர்ந்த கலைஞர்களிடையே பிரிவினையை உண்டாக்க முயற்சிப்பதாகவும், சமூக வலைதளங்களில் துறையினரை கொலைகாரர்கள் என்று கூறுவது மதங்களை அவமானப்படுத்துவது ஆகியவற்றை செய்வதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "முல்லாக்களையும், மதச்சார்பற்ற ஊடகங்களையும் வரிசையில் நிற்க வைத்து சுட்டுத் தள்ளுங்கள். வரலாறு நம்மை நாஜிக்கள் என்று சொல்லும். அதனால் என்ன கவலை" என்று ரங்கோலி கூறிய கருத்துக்களை மேற்கோள் காட்டி, ஆட்சேபனைக்குரிய கருத்துகள் மூலம் இந்து - முஸ்லீம் சமூகத்தினரிடையே பிரிவினையை உண்டாக்குவதாகவும் சயீது குற்றம்சாட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT