நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத் காவல்துறையினர் மும்பை விமான நிலையத்தில் சச்சின் ஜோஷியை கைது செய்தனர்.
சச்சின் ஜோஷி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜேஎம்ஜே குழுமத்தின் தலைவராகவும் இருந்து வரும் ஜோஷி பல்வேறு வியாபாரங்களைச் செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 80 குட்கா பெட்டிகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் செய்த விசாரணையில், இதில் சச்சின் ஜோஷியும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிய வந்தது.
தொடர்ந்து சச்சின் ஜோஷிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் சச்சின் ஜோஷி நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை. துபாயில் வசிக்கும் ஜோஷி எப்போது இந்தியா வந்தாலும் காவல்துறைக்கு தகவல் அனுப்பக் கவன ஈர்ப்பு சுற்றறிக்கை (Look out circular) விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று துபாயிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் வந்த சச்சின் ஜோஷி பற்றிய தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது. அவரை விமான நிலையத்தில் வைத்தே காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்ட சச்சின் ஜோஷியிடம் விசாரணை நடந்ததாகவும், அவருக்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நோட்டீஸ் தரப்பட்டபின் விடுவிக்கப்பட்டதாகவும் தெலங்கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேவைப்படும் போது ஜோஷியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவின் நிறுவனம் தனக்குத் தர வேண்டிய ஒரு கிலோ தங்கத்தைத் தராமல் மோசடி செய்வதாக சச்சின் ஜோஷி வழக்கு தொடர்ந்திருந்தார். ஜோஷியின் குற்றச்சாட்டுகளை ஷில்பா ஷெட்டி மறுத்திருந்தார்.