பாலிவுட்

‘லட்சுமி பாம்’ ட்ரெய்லர் குறித்த டாப்ஸியின் ட்வீட்: அக்‌ஷய் குமார் பதில்

ஐஏஎன்எஸ்

‘லட்சுமி பாம்’ ட்ரெய்லர் குறித்த டாப்ஸியின் ட்வீட்டுக்கு நடிகர் அக்‌ஷய் குமார் பதிலளித்துள்ளார்.

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் 'காஞ்சனா'. தற்போது இந்தப் படம் 'லட்சுமி பாம்' என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார்.

கரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று இணையத்தில் வெளியானது. வெளியான ஒரே நாளில் இந்த ட்ரெய்லரை 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலரும் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்ரெய்லரைப் பகிர்ந்து “அற்புதமான நடிப்பு. இப்படத்தைத் திரையரங்கில் பார்க்க முடியாது என்று நினைக்கும்போது ஏமாற்றமாக உள்ளது” என்று கூறியிருந்தார்.

டாப்ஸியின் இந்த ட்வீட்டுக்குப் பதிலளித்துள்ள அக்‌ஷய் குமார், “நீங்கள் தனி ஆள் இல்லை. ஆனால், படத்தை வெளியிட்டு ஆக வேண்டுமே? உங்கள் அன்புக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT