உங்களிடம் போதை மருந்து இருக்கிறதா என்று கேட்ட பயனர் ஒருவருக்கு, நடிகர் அபிஷேக் பச்சன் நக்கலாகப் பதிலளித்து அவரின் வாயை அடைத்துள்ளார்.
பாலிவுட்டில் போதை மருந்து மாஃபியா இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபர்த்தி போதை மருந்து பயன்பாடு, கடத்தல் ஆகியவற்றுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் பல பாலிவுட் நட்சத்திரங்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரில் பயனர் ஒருவர் அபிஷேக் பச்சனிடம், உங்களிடம் போதைப் பொருள் இருக்கிறதா என்று வேண்டுமென்றே கேள்வி கேட்டார்.
இதற்குப் பதிலளித்த அபிஷேக், மும்பை காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு, "இல்லை, மன்னிக்கவும். நான் அதைச் செய்வதில்லை. ஆனால், உங்களுக்கு மும்பை காவல்துறையை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் உங்கள் தேவைகளைத் தெரிந்துகொண்டு உங்களுக்கு உதவுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு பயனர், 2008 ஆம் ஆண்டு 'துரோனா' திரைப்படத்தின் படுதோல்விக்குப் பின் எப்படி வாய்ப்புகள் கிடைத்தன என்று கேட்டார். அதற்கு அபிஷேக், "வாய்ப்புகள் வரவில்லை. சில படங்களிலிருந்து நீக்கப்பட்டேன். வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால், நாம் நம்பிக்கையில்தான் வாழ்கிறோம்.
தொடர்ந்து முயன்று, நமது இலக்குகளை நோக்கி உழைக்கிறோம். ஒவ்வொரு நாளும் எழுந்து, இந்த பூமியில் உங்களுக்கான இடத்துக்கு நீங்கள் போராடத்தான் வேண்டும். வாழ்க்கையில் எதுவும் எளிதாகக் கிடைப்பதில்லை. உயிருடன் இருக்கும் வரை போராட வேண்டும்" என்று பதிலளித்தார்.