பாலிவுட்

ஒரே கட்டமாக முடிக்கப்பட்ட 'பெல் பாட்டம்' படப்பிடிப்பு: படக்குழுவினர் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

லண்டனில் 'பெல் பாட்டம்' படத்தைத் திட்டமிட்டபடி ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் இன்னும் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் முழுமையாகத் தொடங்கப்படவில்லை. சிறுசிறு காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தப் படப்பிடிப்புக்கு நடிகர்களுடன் சேர்த்து 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, லண்டனில் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கியது 'பெல் பாட்டம்' படக்குழு. ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்க அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரேஷி, லாரா தத்தா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் தனி விமானம் மூலம் லண்டனுக்குப் பயணப்பட்டார்கள்.

அங்கு ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடிப்பது எனத் திட்டமிட்டுச் சென்றார்கள். முதலில் ஒட்டுமொத்தக் குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டு பின்பு படப்பிடிப்பு தொடங்கினார்கள். கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். விரைவில் முடிக்கத் திட்டமிட்டு இருப்பதால், 8 மணி நேரப் படப்பிடிப்பு இல்லாமல், அதிகப்படியான நேரங்களைப் படப்பிடிப்புக்கு ஒதுக்கினார்கள் நடிகர்கள்.

இதனால் திட்டமிட்டபடி ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளது படக்குழு. இந்தியா திரும்பியவுடன் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT