இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நடிகை பாயல் கோஷ், தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி, மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார் நடிகை பாயல் கோஷ். இது பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்துவிட்டார். ஆனால், அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இதனிடையே, நேற்று (செப்டம்பர் 29) மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்துள்ளார் பாயல் கோஷ். இந்தச் சந்திப்பில் பாயல் கோஷுடன் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவும் இருந்தார்.
பாயலின் வழக்கறிஞர் நிதி சட்புதே பேசுகையில், "பாதுகாப்பு கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்து அவரிடம் இந்த வழக்கு பற்றித் தெரிவித்துள்ளோம். காவல்துறை இந்த விஷயத்தில் எதுவும் செய்யவில்லை என்பதால் அமைச்சர் ராம்தாஸும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தனக்குக் கவலை தருவதாகவும் இந்த விவகாரத்தைத்தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
எனக்கும் பாயலுக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுள்ளோம். பாயலின் உயிருக்கு ஆபத்து உள்ளது. நான் அவரைப் பாதுகாத்து வருகிறேன். எனவே சமூக விரோத கும்பலால் எனக்கும் ஆபத்து உள்ளது" என்று கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து ஆளுநரின் ட்விட்டர் பக்கத்திலிருந்து புகைப்படங்களும், தகவலும் பகிரப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாயல் கோஷ், "மகாராஷ்டிர ஆளுநருடன் நல்ல முறையில் சந்திப்பு நடந்தது. அவர் என்னை ஆதரித்தார். போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. பேசுகிறவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நான் நிறுத்த மாட்டேன், நிறுத்த மாட்டேன், நிறுத்த மாட்டேன். சவாலுக்குத் தயார்" என்று குறிப்பிட்டுள்ளார்.