பாலிவுட்

பாலிவுட் ஒரு குடும்பம் போல அழகானது: இயக்குநர் விஷால் பரத்வாஜ்

பிடிஐ

பாலிவுட் என்பது ஒரு குடும்பம் போன்ற அழகான இடம் என்று ‘ஹைதர்’ இயக்குநர் விஷால் பரத்வாஜ் கூறியுள்ளார்

கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். பாலிவுட்டில் வாரிசு நடிகர்களுக்கே வாய்ப்புகளில் முக்கியத்துவம் தரப்படுவதாகவும், துறைக்குள் வரும் புதிய திறமையாளர்களின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுவதாகவும், வாரிசு அரசியல் தந்த மன அழுத்தம் காரணமாகவே சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார் என்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் வெடித்தது.

வாரிசு அரசியலில் தொடங்கிய இந்த சர்ச்சை தற்போதை போதைப் பொருள் வழக்கு வரை வந்துள்ளது. இந்நிலையில், பாலிவுட் என்பது ஒரு அழகான இடம் என்று இயக்குநர் விஷால் பரத்வாஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பிடிஐ நிறுவனத்திடம் அவர் கூறியிருப்பதாவது:

''பாலிவுட்டில் மோசமான கலாச்சாரம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எங்களுடைய பணிச்சூழலில் ஏராளமான அன்பு இருப்பதாகக் கருதுகிறேன். படப்பிடிப்புத் தளம் என்பது ஒரு முழுமையான குடும்பம் போல இருக்கும். இங்கே அழகான ஒரு பணிச்சூழல் உள்ளது.

பாலிவுட் குறித்து வரும் தவறான செய்திகள் எதையும் நான் நம்பவில்லை. எங்கள் துறை அழகானது. இப்போது அது தனிப்பட்ட காரணங்களுக்காக நாசமாக்கப்படுகிறது. ஏன் இப்படி நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். எனவே எங்களை மன்னியுங்கள். எங்களை நாங்களாகவே இருக்கவிடுங்கள்.

இங்கே வெளியாட்கள் என்றெல்லாம் யாரும் கிடையாது. இவையெல்லாம் கட்டமைக்கப்பட்ட பொய்கள். நாங்கள் ஒரு குடும்பமாக இருக்கிறோம். நான் எப்போதும் இங்கே ஒரு வெளியாளாக உணர்ந்ததில்லை. அப்படியே உணர்ந்தாலும் அது மற்ற துறையிலும்தான் எனக்கு நடக்கும்''.

இவ்வாறு விஷால் பரத்வாஜ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT