கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் முன்னாள் நிர்வாகியை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும், சுஷாந்த் சிங்குக்கு அவர் போதைப் பொருட்களை வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட என்சிபி அதிகாரிகள், ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் என்சிபி சம்மன் அனுப்பி வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் முன்னாள் நிர்வாகி க்ஷிஜித் ரவி பிரசாத் என்பவரிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று பல மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் க்ஷிஜித் ரவி பிரசாத் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து என்சிபி, தென்மேற்கு பிராந்திய துணை இயக்குநர் ஜெனரல் எம்.ஏ ஜெயின் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நாங்கள் க்ஷிஜித் ரவி பிரசாத்தைக் கைது செய்துள்ளோம். அவர் விரைவில் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படுவார்.
புதிதாக யாருக்கும் சம்மன் அனுப்பபடவில்லை. இதுவரை நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்'' என்றார்.
இந்த போதைப் பொருள் வழக்கில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.