நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரண வழக்கில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஆஜராக, மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷிரதா கபூர் ஆகியோர் நேற்று வந்தனர்.படங்கள்: பிடிஐ / ஏஎப்பி 
பாலிவுட்

மும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் தீபிகா படுகோன், சாரா கான், ஷிரதா கபூரிடம் விசாரணை

செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷிரதா கபூர் ஆகியோரிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது, சுஷாந்த் சிங்கின் பணத்தை அவரது காதலி ரியா சக்கரவர்த்தி சட்டவிரோதமாக எடுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறையினர் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சுஷாந்த் சிங்குக்கு அவருக்குத் தெரியாமலேயே போதைப் பொருள் கொடுத்து மனநிலை பாதிக்க செய்ய முயற்சி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரபல முன்னணி நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகைகள் சாரா அலி கான், ஷிரதா கபூர் உட்பட நடிகைகள் பலர், கோவாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பார்ட்டியில் பங்கேற்றதும், அப்போது போதைப் பொருள் குறித்து ‘வாட்ஸ் அப்’பில் உரையாடியதும் அம்பலமானது. இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி, தீபிகா, சாரா, ஷிரதா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

அதன்படி, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நேற்று காலை தீபிகா படுகோன் ஆஜரானார். அவரிடம் மும்பை கொலபாவில் உள்ள ஈவ்லின் அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகள் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தனது மேலாளருடன் போதைப் பொருள் குறித்து உரையாடியதாக தீபிகா படுகோன் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், சாரா கான், ஷிரதா கபூரிடம் பலார்ட் எஸ்டேட் அலுவலகத்தில் தனியாக விசாரணை நடந்தது. அப்போது, ‘க்வான்’ டேலன்ட் கம்பெனியில் முக்கிய நிர்வாகிகளுடன் சாராஉட்பட பலர் போதைப் பொருள் குறித்து பேசியதை அவர்கள் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக தீபிகா படுகோனின் மேலாளர் கரீஷ்மா பிரகாஷிடம் கடந்த வெள்ளிக்கிழமை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம் 2-வது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது. நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

SCROLL FOR NEXT