எஸ்பிபி சகாப்தத்தை மறக்க முடியாது என்று கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இரங்கல்கள் குவிந்தன.
இன்று (செப்டம்பர் 26) எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபி மறைவுக்கு கங்கணா ரணாவத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"90-களில் வளர்ந்தவர்கள் யாராலும் இந்த சகாப்தத்தை மறக்க முடியாது. நாம் வளர்ந்த வருடங்களில் பிரிக்க முடியாத ஒரு பங்காக இவரது குரல் இருந்தது. நீங்கள் எங்களுக்குள் இருப்பீர்கள், எங்களில் ஒரு அங்கமாக".
இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.