பாலிவுட்

போதைப் போருள் வழக்கு: தீபிகா, சாரா அலி கான், ஷ்ரதா ஆகியோரிடம் நாளை விசாரணை

ஐஏஎன்எஸ்

போதைப் போருள் வழக்கு விசாரணைக்காக நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர் மூவரும் நாளை ஆஜராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

இந்த விவகாரம் குறித்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில், ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பிரபல பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர் ஆகியோர் நாளை(26.09.20) போதைப் போருள் தடுப்புப் பிரிவு போலீஸார் முன் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவில் இருந்த தீபிகா நேற்று மும்பை வந்து சேர்ந்தார். என்சிபி விசாரணைக்கு நாளை ஆஜராக தீபிகா ஒப்புக் கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தீபிகாவுடன் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் , சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் ஆகியோரும் ஆஜராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT