‘டூபி’ என்ற குறும்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதன் மூலம் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் அமிதாப் பச்சன்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்குக்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து நடிகை ரியா, அவரது சகோதரர் ஷௌவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக்காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் போலீஸார் தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. இந்தச் சூழலில் நடிகர் அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டூபி’ என்ற குறும்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு அதன் இயக்குநருக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அமிதாப் கூறுகையில், ''என்னுடைய ‘அலாவுதீன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கீத் கோம்ஸ் நீண்ட பயணத்துக்குப் பிறகு இந்த ‘டூபி’ படத்தை இயக்கியுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘டூபி’ என்றால் போதைப் பொருளைப் புகைக்கப் பயன்படும் சிகரெட் என்று அர்த்தம். இதனால், இந்தச் சூழலில் இது தேவையா என்கிற ரீதியில் அமிதாப் பச்சனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் பயனர் ஒருவர், ''முதலில் பாலிவுட்டில் நடக்கும் போதைப் பொருள் புழக்கத்தைப் பற்றிப் பேசுங்கள். பின்பு சமுதாயத்தையும், திரைப்படங்களையும் பற்றிப் பேசலாம். இல்லையென்றால் அமைதியாக இருந்து விடுங்கள்'' என்று சாடியுள்ளார்.
இதுபோலப் பலரும் அமிதாப் பச்சனின் பதிவில் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.