பாலிவுட்

அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகப் பதிவு: விமர்சித்தவர்களைச் சாடிய இர்ஃபான் கான் மகன் 

செய்திப்பிரிவு

இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்துத் தான் பகிர்ந்த பதிவுக்கு வந்த எதிர்ப்புகளுக்கு, நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கடுமையாகப் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அனுராக் மறுப்புத் தெரிவித்துள்ளார். அனுராக் மீதான இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாகப் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இயக்குநர் அனுபவ் சின்ஹா, நடிகைகள் டாப்ஸி, டிஸ்கா சோப்ரா, சுர்வீன் சாவ்லா, அனுராக்கின் முன்னாள் மனைவிகள் ஆர்த்தி பஜாஜ், கல்கி கொச்சிலின் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபிலும் அனுராக்குக்கு ஆதரவு தெரிவித்துப் பதிவிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:

"தலைதூக்கி நில்லுங்கள் அனுராக். நான் சொல்லப்போகும் இந்த விஷயத்தால் நீங்கள் அனைவரும் என்னை வெறுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், ஒரு விஷயம் தவறாகப் படும்போது அதற்காக் குரல் கொடுக்க வேண்டும். அந்தப் பெண் ஏன் உண்மையைச் சொல்லியிருக்கக் கூடாது எனப் பலர் என்னிடம் கேட்கின்றனர். நான் எனது தீர்மானத்தை நம்புகிறேன். என் வார்த்தைகள் தவறென்றால் அதற்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்”.

இவ்வாறு பாபில் கூறியிருந்தார்.

இந்தப் பதிவுடன் பகிர்ந்திருந்த கடிதத்தில் பாபில் கூறியிருப்பதாவது:

"மீடூ போன்ற ஒரு விலைமதிக்க முடியாத இயக்கம் ஒருவருக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பயன்படுத்தப்படுவது வெட்கக்கேடானது. அதுவும் மோசமான ஆணாதிக்கம் இருக்கும் துறையில் சமத்துவத்துக்கு ஊக்கம் தரும் ஒருவருக்கு எதிராக.

நாம் ஒரு வினோதமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் உண்மையை வெளிப்படுத்துவதை விட உருவாக்குவது சுலபம். நாம் வளருவோம் என வேண்டுகிறேன். என் கவலை என்னவென்றால், மீடூ இயக்கம் மூலமாகப் பரப்பப்படும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளினால் அந்த இயக்கத்தின் நம்பகத்தன்மை கெடும். உண்மையிலேயே ஆதரவு தேவைப்படும் பெண்களுக்கு ஆதரவு கிடைக்காது. இது காயப்படுத்தும் விஷயம்".

இவ்வாறு பாபில் கூறியிருந்தார்.

இதைப் பலரும் விமர்சித்து எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மேலும் இர்ஃபான் கானின் பெயரையும் குறிப்பிட்டு அவர் உன்னை நினைத்து வெட்கப்படுவார் என்கிற ரீதியில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதற்குப் பதிலளித்திருக்கும் பாபில், "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, உங்களது வெறுப்பினால் எனக்கு ஒரு விடுதலை உணர்வு கிடைத்திருக்கிறது. ஏனென்றால் உங்களுக்கு வெறுப்பைத் தவிர, ஒரு மனிதரைப் பற்றி அவசரமாகத் தீர்மானிப்பதை விட எதுவும் தெரியாது என்பதை நான் உணர்ந்துவிட்டேன்.

உண்மையில், என் அப்பாவைத் தெரியும் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் மீது வைத்திருந்த மரியாதை போய்விட்டது. என்னை விட என் அப்பாவை நன்றாகத் தெரியுமா? 'உன் அப்பா உன்னை நினைத்து வெட்கப்படுவார்' என்றெல்லாம் சொல்கிறீர்களே. வாயை மூடுங்கள்.

என் அப்பா என்ன செய்திருப்பார் என்று எனக்குப் பாடம் எடுக்காதீர்கள். அவரது உண்மையான நம்பிக்கைகள் என்னவென்று தெரியாமல் உங்களால் முடியும் என்ற காரணத்தால் ஒரு கூட்டத்தோடு சேராதீர்கள். நீங்கள் இர்ஃபான் கானின் ரசிகராக இருந்தால் என்னிடம் வந்து நிரூபியுங்கள். டர்காவ்ஸ்கி, பெர்க்மேன் போன்றோர் மீது அவருக்கிருந்த மோகத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அதன்பின் என் அப்பாவை உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று நினைத்திருக்கிறீர்கள் என்பது பற்றி உரையாடலாம். அவர் உங்களையெல்லாம் தாண்டி இருந்தார் நண்பர்களே" என்று கூறியுள்ளார் பாபில்.

SCROLL FOR NEXT