பாலிவுட்

சுத்தம் செய்வதற்குச் சரியான நேரம் இது: போதை மருந்து விவகாரம் குறித்த விசாரணைக்கு ரவீணா டண்டன் ஆதரவு

ஐஏஎன்எஸ்

போதை மருந்து விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைக்கு ரவீணா டண்டன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ மும்முரமாக விசாரித்து வருகிறது. தற்போது போதை மருந்து ஏதேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் சுஷாந்தின் காதலி ரியா, ரியாவின் சகோதரர் ஷெளவிக், சுஷாந்தின் மேலாளர் சாமுயல் மிரண்டா, உதவியாளர் திபேஷ் சாவந்த் ஆகியோர் போதை மருந்து உபயோகம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது.

தற்போது போதை மருந்து உபயோகத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. இதில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கும், க்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி த்ருவ் சிட்கோபேகருக்கும் விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னணி நடிகையான ரவீணா டண்டன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"சுத்தம் செய்வதற்குச் சரியான நேரம் இது. இதை வரவேற்கிறேன். நமது இளம்/ எதிர்காலத் தலைமுறைகளுக்கு உதவியாக இருக்கும். இங்கிருந்து ஆரம்பித்து அப்படியே மற்ற துறைகளிலும் விசாரியுங்கள். பிரச்சினையை வேரோடு களைந்தெடுங்கள். குற்றவாளிகளை, பயன்படுத்துபவர்களை, விநியோகித்து வாங்குபவர்களை, இதனால் ஆதாயமடையும், இதைப் பார்த்து நடவடிக்கை எடுக்காமல் மக்களை நாசமாக்கும் பெரிய மனிதர்களைத் தண்டியுங்கள்".

இவ்வாறு ரவீணா டண்டன் தெரிவித்துள்ளார்.

ரவீணாவின் இந்தக் கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். அவர் வெளிப்படையாக இதுபற்றிப் பேசுவது பாராட்டுக்குரியது என்றும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கு இதுபோன்ற விசாரணைகள் முக்கியம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT