பாலிவுட்

சுஷாந்த் தற்கொலை வழக்கு: சாரா அலி கான், ஷ்ரத்தா கபூரிடம் விசாரிக்க முடிவு

ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வரும் போதை மருந்துத் தடுப்புப் பிரிவு போலீஸார், பாலிவுட் நடிகைகள் சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரை விசாரிக்க உள்ளனர்.

சுஷாந்த் சிங் மரண வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், மேலாளர், காதலி ரியா, ரியாவின் அண்ணன் ஆகியோருடன் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் சுஷாந்தின் காதலி ரியாவையும், அவரது சகோதரர் ஷௌவிக்கையும், சுஷாந்தின் தனிப்பட்ட உதவியாளர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட ஒரு சிலரையும், போதை மருந்தை வாங்கியது மற்றும் எடுத்துச் சென்ற குற்றங்களுக்காக போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது. தற்போது இது தொடர்பாக சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். இந்த இரு நடிகைகள் உள்ளிட்ட இன்னும் சிலருக்கு விசாரணைக்கான சம்மன் இந்த வாரத்தில் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

இதைத் தாண்டி நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஃபேஷன் டிஸைனர் சைமன் கம்பட்டா ஆகியோரிடமும் அடுத்த வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

சாரா அலி கான், சுஷாந்த் சிங்குடன் 'கேதர்நாத்' படத்தில் நடித்தார். ஷ்ரத்தா கபூர் 'சிச்சோரே' படத்தில் நடித்திருந்தார். இவர்கள் சுஷாந்துடன் சேர்ந்து புனேவுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தீவுக்குப் பல முறை பார்ட்டிகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளதால்தான் இவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

SCROLL FOR NEXT