பாலிவுட்

நடிகர்களிடம் அவர்களுக்கு சம்மந்தமில்லாத துறைகளை பற்றி கேட்காதீர்கள் - மனோஜ் பாஜ்பாயி

ஐஏஎன்எஸ்

நடிகர்களிடம் அவர்களுக்கு சம்மந்தமில்லாத துறைகளை பற்றி கேட்காதீர்கள் என்று நடிகர் மனோஜ் பாஜ்பாயி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது:

நாங்கள் நடிகர்கள் என்பதற்காகவே ட்விட்டரில் எங்களை நீங்கள் கேலி செய்கிறீர்கள். எங்களுக்கு பரிச்சயமற்ற துறைகளை பற்றி எங்களிடம் கருத்து கேட்கிறீர்கள். ஆமாம் நாங்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே. பொருளாதாரத்தை பற்றியோ, இந்திய சீன எல்லை பிரச்சினைகளை பற்றியோ அல்லது வேறு துறைகளை பற்றியோ எங்களுக்கு போதுமான அளவு தெரியாது. பிறகு எவ்வாறு உங்களது கேள்விகளுக்கு நாங்கள் பதில் கூறுவது?

எனவே ஒரு நடிகரை பேச சொல்லி அவரை கேலி செய்வதை நிறுத்துங்கள். அவர்களை அவர்களது வேலையை மட்டும் செய்ய விடுங்கள். அவர்கள் ஏதேனும் தவறு செய்தாலோ, குடிமக்களை அல்லது நாட்டை இழிவுபடுத்தினாலோ அவர்களை கேளுங்கள். அவர்களை பதில் கூறச் சொல்லுங்கள். ஆனால் அவர்களுக்கு தொடர்பில்லாத துறைகளை பற்றி கேட்காதீர்கள்.

ரசிகர்களை பற்றியோ கவர்ச்சியை பற்றியோ நான் அதிகமாக கவலைப்படுவதில்லை. என்னுடைய வேலை என்னுடைய வீடு இரண்டையும் பற்றி மட்டுமே நான் கவலைப்படுகிறேன். அதீத சுதந்திரத்துடன் அனைத்தையும் செய்கிறேன். மளிகைக் கடைக்கும் செல்வேன், காய்கறி கடைக்கும் செல்வேன். ஏனெனில் எனக்கு எந்த கவலையும் இல்லை.

ஒரு நடிகனாகவும் ஒரு மனிதனாகவும் என்னுடைய வளர்ச்சியில் எனக்கு அக்கறை உள்ளது. மற்ற விஷயங்கள் எல்லாம் என்னை பாதிப்பதில்லை. அவற்றை பற்றி நான் கவலைப்படுவதுமில்லை. சில நேரங்களில் என்னிடம் சிலர் ‘மனோஜ் உனக்கு ட்விட்டரில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். நீ அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்’ என்று கூற்கின்றனர். இவையெல்லாம் முக்கியம் என்று கூட எனக்கு தோன்றவில்லை.

என்னுடைய தொழில்ரீதியான பதிவுகளையும், சில தனிப்ப்பட்ட பதிவுகளையும் அவற்றில் பகிர்கிறேன். இதை தவிர்த்து எந்தவொரு உணர்வுப்பூர்வமான உறவும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இல்லை.

இவ்வாறு மனோஜ் பாஜ்பாயி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT