பாலிவுட்

சுஷாந்த் உற்சாகமானவர்; நகைச்சுவை உணர்வு மிக்கவர்: லிஸா மாலிக்

ஐஏஎன்எஸ்

நடிகர் சுஷாந்த் எப்போதும் உற்சாகத்துடனும், நகைச்சுவை உணர்வுடனும் பேசக்கூடியவர் என்று பாடகி லிஸா மாலிக் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் அல்லது கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் தனியாக வழக்குப் பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை க்ரித்தி சனோனுடன் சுஷாந்த் சிங் ராஜ்புத் மகிழ்ச்சியாக இருந்ததாக நடிகையும் பாடகியுமான லிஸா மாலிக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளதாவது:

''2 ஆண்டுகளுக்கு முன்பு க்ரித்தியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது நான் சுஷாந்த் சிங்கைப் பார்த்தேன். அவர் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். பார்ட்டியில் இருந்த அனைவரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். மகேஷ் ஷெட்டி போன்ற எங்களுக்குப் பொதுவான நண்பர்கள் பலரும் அங்கு இருந்தனர்.

சுஷாந்த் எப்போதும் உற்சாகத்துடனும், நகைச்சுவை உணர்வுடனும் பேசக்கூடியவர். க்ரித்தி பிறந்த நாள் பார்ட்டியின்போது அவர்கள் இருவரும் ஒரு காதல் ஜோடியைப் போல மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்''.

இவ்வாறு லிஸா கூறியுள்ளார்.

2017ஆம் ஆண்டு வெளியான ‘ராப்தா’ படத்தில் சுஷாந்த் சிங், க்ரித்தி சனோன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT