பாலிவுட்

ஜெயா பச்சனுக்கு ஆதரவு: நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளான சோனம் கபூர்

ஐஏஎன்எஸ்

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து வெடித்திருக்கும் சர்ச்சையும், அடுத்தடுத்து சுமத்தப்பட்டு வரும் பழிகளும் குற்றச்சாட்டுகளும் பாலிவுட்டை உலுக்கியுள்ளன.

சமாஜ்வாதி கட்சி உறுப்பினரும், நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன், பாலிவுட் துறைக்கு எதிராகத் தொடர்ந்து நடந்து வரும் முயற்சிகள், அவதூறுகள் குறித்து மாநிலங்களவையில் நேற்று பேசினார். திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக முடிவில்லாமல் தொடரும் வசவுகளுக்குத் தடை விதித்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜெயா பச்சன் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனால் சுஷாந்த் மற்றும் கங்கணாவின் ரசிகர்கள் பலரும் ஜெயா பச்சனை சமூக வலைதளங்களில் சாடி வந்தனர். ஜெயா பச்சனின் பெயர் இந்திய அளவில் ட்ரெண்டானது.

இந்நிலையில் நடிகையும், நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயா பச்சனின் வீடியோவைப் பகிர்ந்தார். மேலும், ''நான் வளர்ந்ததும் இவரைப் போல ஆக விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் ஏற்கெனவே கொந்தளிப்பில் இருந்த சுஷாந்த் ரசிகர்கள் சோனம் கபூரைக் கிண்டலடிக்கத் தொடங்கினர். அவரது பதிவில், ''இன்னுமா நீங்கள் வளரவில்லை. ஏற்கெனவே உங்களுக்கு 35 வயதாகிவிட்டது. இனிமேல் எப்போது வளரப்போகிறீர்கள்'' என்று பின்னூட்டம் இட்டனர்.

சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. சுஷாந்த் மற்றும் கங்கணா ரசிகர்கள் வாரிசு நடிகர்களின் சமூக வலைதளப் பக்கங்களுக்குச் சென்று அவர்களை நேரடியாகச் சாடி வருகின்றனர். இதனால் பலரும் சமூக வலைதளங்களிலிருந்தே விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT