‘‘சிவசேனா கட்சி தனது கொள்கைகளை மறந்துவிட்டு சோனியா சேனாவாக மாறிவிட்டது’’ என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.
இந்தி திரையுலகில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனாவையும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு சிவசேனா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை போல மகாராஷ்டிரா மாறியுள்ளது’ என்று கங்கனா கூறினார். சிவசேனாவுடனான இந்த மோதல் போக்கு காரணமாக அவர் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து மும்பை வருவதில் சிக்கல் எழுந்தது. எனினும், மத்திய அரசின் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அவர் மும்பை வந்தார்.
அலுவலகம் இடிப்பு
இந்த சூழலில், அனுமதியை மீறி கட்டப்பட்டிருப்பதாக கூறி, கங்கனாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் அன்றைய தினம் இடித்தனர். மும்பை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து, இந்த நடவடிக்கை பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கங்கனா ரனாவத் நேற்று கூறியிருப்பதாவது:
பால் தாக்கரேவின் தீர்க்கமான கொள்கைகளால் சிவசேனா எனும் இயக்கம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற காரணத்துக்காக அந்தக் கொள்கைகள் தற்போது காற்றில் பறக்க விடப்பட்டிருக்கின்றன. அதிகாரப் பசியால் சிவசேனா தற்போது சோனியா சேனாவாக (காங்கிரஸ் – சிவசேனா கூட்டணியை குறிக்கிறார்) மாறிவிட்டது.
குடும்ப வாரிசு ஒருவர் (முதல்வர் உத்தவ் தாக்கரே) என்னை மிரட்டி மவுனமாக்கி விடலாம். ஆனால், லட்சக்கணக்கான மக்களை அவர் எவ்வாறு மவுனமாக்க முடியும்?
இவ்வாறு அதில் கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.